Followers

Thursday 17 November 2011

சோனியாவுடன் சந்திப்பு:நடிகர் சிரஞ்சீவி மத்திய மந்திரி ஆகிறார்

 
 
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார்.ஆந்திர சட்டசபை தேர்தலில் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மேலும் கட்சியை நடத்தவும் சிரமப்பட்டார்.
 
ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள போதிலும் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி போன்றவர்களால் கடும் சவாலை சந்தித்து வருகிறது. எனவே சிரஞ்சீவியை காங்கிரசுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.அதை ஏற்று கடந்த ஆகஸ்டு மாதம் தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரசுடன் சிரஞ்சீவி இணைத்தார்.
 
காங்கிரசில் சிரசீவிக்கும், அவரது எம்.எல்.ஏ.க்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் உரிய பதவிகள் கொடுத்து முக்கியத்துவம் தரப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரோசய்யாவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, தெலுங்கானா, பிரச்சினை மற்றும் சோனியா உடல் நலக்குறைவு காரணமாக சிரஞ்சீவிக்கு காங்கிரசில் எந்த பதவியும் கொடுக்கப்படாமல் இருந்தது.
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நடிகர் சிரஞ்சீவி கட்சி இணைப்புக்குப் பிறகு நேற்று முதன் முதலாக டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது பிரஜாராஜ்ஜியம் கட்சியை காங்கிரசுடன் இணைத்ததற்காக சிரஞ்சீவிக்கு சோனியா நன்றி தெரிவித்தார்.
 
மேலும் மத்திய மந்திரி சபையிலும், காங்கிரஸ் கட்சியிலும் உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப முக்கியமான பதவிகள் தரப்படும் என்று சிரஞ்சீவியிடம் சோனியா உறுதியளித்தார். இதனால் சிரஞ்சீவியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர்.
 
மத்திய மந்திரி சபை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் (டிசம்பர்) தொடக்கத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அப்போது நடிகர் சிரஞ்சீவி மத்திய மந்திரிசபையில் சேர்க்கப்படுவார். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரி பதவி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
 
மத்திய மந்திரி பதவியில் நீடிக்க வேண்டுமானால், பாராளுமன்ற இரு அவைகளில் ஏதாவது ஒன்றில் சிரஞ்சீவி உறுப்பினர் ஆக வேண்டும். டெல்லி மேல்-சபைக்கு ஆந்திராவில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த இடத்தில் சிரஞ்சீவியை நிறுத்தி மேல்-சபை எம்.பி. ஆக்க சோனியா முடிவு செய்துள்ளார்.
 
உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடை பெற உள்ளதால், அந்த மாநில மக்களை கவரும் வகையில் மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.



No comments:

Post a Comment