Followers

Monday, 14 November 2011

சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் எனது அரசு வேரறுக்கும்- ஜெயலலிதா உறுதி

 
 

சென்னை: தமிழகத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள், நில அபகரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறைக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அரசின் முக்கியத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் மிக முக்கிய பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உள்ளது. மேலும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.

இதன் காரணமாக இவர்களை அவ்வப்போது நேரில் அழைத்து மாநாடு நடத்துவது மாநில முதல்வர்களின் வழக்கமாகும். அந்த வகையில் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார். இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டு அரங்கில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி தொடக்க உரை நிகழ்த்தினார்.

ஜெயலலிதா தனது பேச்சின்போது குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்:

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களாகிய உங்களுடன் உரையாடுவது குறித்து மகிழ்ச்சி. மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கொள்வதற்குரிய சூழலை உருவாக்குவதற்கு இந்த மாநாட்டில் நடைபெறும் விவாதங்களும் மேற்கொள்ளப்படும். உறுதியான அணுகுமுறைகள் உதவும். ஒவ்வொரு முறையும் நான் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது நிர்வாகத்தை சீரமைக்கவும், சமூக, பொருளாதார, நிதிக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவும் நான் சீர்திருத்தங்களை மேற்கொள்வது வழக்கம்.

இது எனது அரசின் நிர்வாக சிறப்புக்கு முத்திரை பதிப்பதாகும். இந்த அரசு தூய்மையான, ஒளிமறைவற்ற, திறமையான, பொறுப்பான நிர்வாகத்தை அளிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. தமிழக மக்கள் என் மீது தங்கள் நம்பிக்கையை தெரிவித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தீர்க்கமான முடிவை அளித்திருக்கிறர்கள்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்

மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பது எனது கனவாகும். ஏழை மற்றும் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து அவர்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை பெற்றிட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.

சட்ட ஒழுங்கை திறமையாக பராமரிப்பது, மக்கள் பணிகளை திறமையாக நிறைவேற்றுவது, விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது, அடிப்படை வசதிகளை உருவாக்குவது, பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது மேலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவது ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.

சமூக விரோத சக்திகளையும், ரவடிகளையும் ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு செய்தவர்கள் மீது விரைவாகவும், கடுமையாகவும் எடுத்துள்ள நடவடிக்கை மாநில அரசின் மீதும், காவல்துறை மீதும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

சட்ட நடவடிக்கைகள்படி அந்த நிலங்களை உரியவர்களுக்கு ஒப்படைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனது முந்தைய ஆட்சி காலங்களில் தமிழக காவல்துறை சிறப்பான முறையில் பணியாற்றி வந்துள்ளது. நான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அனைத்து பிரச்சனைகளையும் அச்சமின்றி நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு சுதந்திரம் அளித்தேன்.

தீவிரவாதம், நக்சலைட் போன்றவற்றால் நமது சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் எப்போதுமே பயங்கரவாதத்தை திறமையாக ஒடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளேன்.

நமது சமுதாயத்தில் பிரிவினை சக்திகள் வளரவிடக்கூடாது என்றும் உறுதிபட நடவடிக்கை எடுத்து வந்துள்ளேன். பயங்கரவாதம் மற்றும் அடிப்படை வாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு நமது உளவுத்துறை வலுப்படுத்தப்பட வேண்டும். சட்ட ஒழுங்கை நிலை நாட்டும்போது சிறிய சம்பவங்களை கூட துச்சமாக கருதிவிடக்கூடாது.

அத்தகைய சிறிய சம்பவங்கள் ஒரு வகுப்பு மோதலாகவோ, ஜாதி மோதலாகவோ உருவெடுக்கலாம். இத்தகைய நிலையை நீங்கள் விழிப்புடன் இருந்து திறமையாக கையாளுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காவல்துறையினருக்கு அவ்வப்போது பயிற்சி அளித்து நவீன ஆயுதங்களையும், தொலைத் தொடர்பு சாதனங்களையும் அளிப்பது அவசியம்.

கடந்த காலங்களில் இதற்கு அளிக்கப்பட்ட முன்னுரிமையை இப்போதும் எனது அரசு வழங்கும். சிறந்த நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதற்கு தடையாக இருப்பது ஊழல். மாவட்ட தலைவர்கள் என்ற முறையில் கலெக்டர்களுக்கு இத்தகைய நிலையை உருவாக்குவதற்கு கடுமையான பொறுப்பு இருக்கிறது.

லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகம் அரசிலும் எதிரொலிக்கும். எனவே மக்களுக்கு எதிர்பார்ப்புக்கிணங்க மாவட்ட கலெக்டர்கள் செயல்பட வேண்டும். விவசாயம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரம், கல்வி, நலத்திட்டங்கள், எஸ்.சி.எஸ்.டி, பின்தங்கியோர் மற்றும் மிகவும் பின்தங்கியோர் ஆகியோருக்கு முன்னரிமை அளிக்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு, அடிப்படை வசதிகளில் கிராமப்புறங்களுக்கும் நகர்புறங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்தல், ஆண் பெண் ஆகியோரை சமமாக நடத்துதல், திறமையை வளர்ப்பது, வேலையை உருவாக்குவது ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும்.

நான் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு எடுத்துரைத்திருக்கிறேன். இவற்றை திறம்பட செயல்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். அதிகாரிகள் தங்களுடைய எண்ணங்களை சுருக்கமாக குறிப்பிட வேண்டும்.

எதிர்காலத்தில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை முன் மாநிலமாக பின்பற்றக்கூடிய அளவுக்கு சிறந்த நிர்வாகத்தை அளிக்க நான் திட்டமிட்டிருக்கிறேன். அதிகாரிகள் இதனை உருவாக்குவதற்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

அமைச்சர்கள், உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா, டிஜிபி ராமானுஜம், அரசுத் துறை செயலாளர்கள், மாவட்டஆட்சித் தலைவர்கள், எஸ்.பிக்கள், மாநகர காவல்துறை ஆணையாளர்கள், ஐஜிக்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

நாளை காலை கலெக்டர்கள் மாநாடும், பிற்பகலில் காவல்துறை அதிகாரிகளின் மாநாடும் நடைபெறும்.

No comments:

Post a Comment