Followers

Thursday 8 March 2012

பெங்களூர் கோர்ட் கலவரம்... போலீஸை காப்பாற்ற சசி தந்த ஐடியா!

 
 
 
பெங்களூர் பத்திரிகையாளர்களுக்கும் கர்நாடக வழக்கறிஞர்களுக்கும் இடையே ஒரு மாத காலமாக பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றமும் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில்தான் இருக்கிறது.
 
கடந்த வாரம் வெளியே வழக்கறிஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே முறுகல் தொடங்கிய அதே நேரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, சசிகலாவை கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
 
டான்சி நில மதிப்பீடு, சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் கம்பெனி பற்றிய கேள்விகளுக்கு சசிகலா "தெரியாது' என பதில் சொல்லிக் கொண்டிருந்தபோதே வெளியில் வன்முறை வெடித்தது.
 
காதை பிளந்த கல்லெறி சம்பவங்களைப் பற்றியெல்லாம் அசராத நீதிபதி மல்லிகார்ஜூனையா, ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், மார்பிள்ஸ் அண்ட் மார்வெல்ஸ், ஜெயா பப்ளிகேஷன் என பல்வேறு நிறுவனங்கள், கைப்பற்றப்பட்ட நகைகள் பற்றி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.
 
நகைக் குவியல்- அசரா சசி
 
நகைகள் குறித்த கேள்விகள் எழத்தொடங்கியபோது சசிகலாவின் முகம் குழப்பத்தில் தத்தளித்தது.
 
'நல்லம்ம நாயுடு தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 36, போயஸ் கார்டன், சென்னை என்ற முகவரியில் 1996ம் ஆண்டு சோதனை நடத்தியபோது, 97 நகைப் பெட்டிகளில் இருந்த 23 கிலோ 113 கிராம் தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன. இதில், தங்க நகையின் மதிப்பு 91 லட்சத்து 71 ஆயிரத்து 571 ரூபாய், வைர நகைகளின் மதிப்பு 2 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய். இதன் மொத்த மதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 15 ஆயிரத்து 43 ருபாய் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது பற்றி சாட்சியம் கூறி இருக்கிறார்களே என்ற கேள்வியை, இரண்டு மூன்று முறை சரியாகக் கேட்டு எழுதிக்கொண்டார்.
 
பிறகு போயஸ் தோட்டத்து வழக்கறிஞரின் முகத்தைப் பார்த்த சசிகலா ஆழமாக யோசித்து, '36, போயஸ் கார்டன், சென்னை முகவரியில் போலீஸார் சோதனையிட்டபோது, நானும் செல்வி ஜெயலலிதாவும் சிறையில் இருந்தோம். இந்தச் சோதனை வீட்டு உரிமையாளர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில் நடக்கவில்லை. சட்டப்படி வீட்டு உரிமையாளர் முன்னிலையில்தான் நடந்திருக்க வேண்டும் அல்லது அவரது அனுமதி பெற்றாவது நடந்திருக்க வேண்டும். அதைவிட்டு, வீட்டு ஊழியர்களை கார் ஷெட்டில் வலுக்கட்டாயமாக அடைத்துவிட்டு சோதனை நடத்தியது சரிதானா? என்று எதிர்க் கேள்வி கேட்டு எகிறினார்..
 
நீதிபதியும் விடவில்லை..
 
'வாசுதேவன் அளித்துள்ள சாட்சியத்தில் 31 ஏ, போயஸ் கார்டன் வீட்டில் 42 நகைப் பெட்டிகளை எடுத்ததாகவும், அதில் 4 கிலோ 475 கிராம் தங்க, வைர நகைகள் இருந்ததாகவும், தங்க நகையின் மதிப்பு 17 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய் என்றும், வைர நகைகளின் மதிப்பு 30 லட்சத்து 24 ஆயிரத்து 550 ரூபாய் என்றும் கூறி இருக்கிறார். கூடவே சில விலை உயர்ந்த கைக்கடிகாரங்களைக் கைப்பற்றியதாகவும் கூறி இருக்கிறாரே? என்றார் நீதிபதி மறுபடியும்.
 
சசியும் விடாக்கொண்டன் போல 'முதலில் 31 ஏ போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த முறையான அனுமதி பெறவில்லை. சோதனையின்போது 42 பெட்டிகள் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வீட்டு உரிமையாளர் இல்லாமல் சோதனை நடத்தியதே தவறு என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு இது பற்றி எழுத்து மூலமாகப் பதில் அளிக்கிறேன்' என்றார்.
 
சசிகலா ஐடியா
 
இந் நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நீதிமன்ற அறைக்குள் வழக்கறிஞர்கள் தாக்குதலில் இருந்து தப்பிய சில போலீசார் நுழைந்தனர். உடனே நீதிமன்ற அறையின் கதவை உட்புறமாக போலீசார் ஒருவர் தாழிட்டார்.
 
இது தான் சாக்கு என உடனே சசிகலாவின் வழக்கறிஞர் விசாரணையை ஒத்திவைக்கக் கோரினார். ஆனால் நீதிபதியோ எல்லாம் சரியாகிவிடும் காத்திருங்கள் என்று கூறி விசாரணையையும் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
 
சுமார் 55 நிமிடங்கள்... எந்த விசாரணையும் இல்லை..
 
இந்நிலையில் உள்ளே இருந்த போலீசாரின் பாதுகாப்புக்காக உடைகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் எங்கே உடைகளை மாற்றுவது என்று பூட்டப்பட்ட நீதிமன்றத்துக்குள் அனைவரும் ஆலோசித்துக் கொண்டிருக்க சட்டென சசிகலாவோ, நீதிபதி அறையில் மாற்றலாமே என்றார்.. இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
 
'பாதுகாப்புக்கு வந்த உங்களுக்கே நாங்க பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கு என்று போலீஸாரைப் பார்த்து நீதிபதி கமென்ட் அடிக்க, சசிகலாவும் அதை ரசித்தார்.
 
அதன் பின்னர் சுதாகரனின் வழக்கறிஞர் தர்மாராவ், வெளியில் நடந்த சம்பவங்களை நீதிபதியிடம் விவரித்தார்.
 
இதுதான் சாக்கென எண்ணிய சசி தரப்பு, நீதிபதியின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்..இதனால் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவையுங்கள் என்றார்.
 
இதையடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட, நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக 142 படிகள் இறங்கி காரில் ஏறிக் கிளம்பினார் சசிகலா.
 
விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதால் சந்தோஷமாக‌ இளவரசியுடன் அன்று மாலையே சென்னைக்கு விமானத்தில் பற‌ந்துவிட்டார் சசிகலா.



No comments:

Post a Comment