உத்திரபிரதேசம் , பஞ்சாப் , உத்ராகந்த் , மணிப்பூர் , கோவா என ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன ... இதில் உ.பி , பஞ்சாப் தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்களுக்கிடையே அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது , குறிப்பாக 403 தொகுதிகள் அடங்கிய உ.பி யில் ஆட்சியை பிடிப்பவர்கள் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது அரசியல் வரலாறு ...
அதனால் தான் மாநில கட்சிகளான எஸ்.பி , பி.எஸ்.பி இரண்டுடனும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸ் , பி.ஜே.பி ஆகிய தேசிய கட்சிகளும் மிகுந்த வலிமையுடன் களத்தில் இறங்கின ... எப்போதுமே குடும்ப அரசியலை நம்பாத பி.ஜே.பி உமாபாரதியை நட்சத்திர பேச்சாளராக களமிறக்க , காங்கிரஸ் வழக்கம் போல ராகுல் காந்தியை களமிறக்கியது ...
இந்த தடவையும் ராகுல் காந்தி கூட்டிய 200 க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களுக்கு கை தட்ட கூட்டம் கூடியதே ஒழிய " கை " க்கு ஒட்டு போடுவதற்கு அல்ல என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றன ... பீகார் , குஜராத் தேர்தல்களை தொடர்ந்து ராகுல் மீண்டும் மண்ணை கவ்வியிருப்பது அவர் மீடியாக்களை கவர்ந்த அளவிற்கு மக்களை கவரவில்லை என்பதையே காட்டுகிறது ...
2007 ஆம் ஆண்டு தேர்தலில் 22 இடங்களை மட்டும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 37 இடங்களை கைப்பற்றியிருந்தாலும் , கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் 95 தொகுதிகளை கைவசம் வைத்திருந்த காங்கிரசிற்கு இது பெரிய அடி ... எதிர்பார்த்ததை போலவே தனிப்பெரும் கட்சியாக 224 தொகுதிகளை கைப்பற்றியுருக்கும் எஸ்.பி தனித்து ஆட்சியமைக்க போவது உறுதியாகிவிட்டது ... இந்த வெற்றிக்கு முலாயம் சிங்கின் புதல்வன் அகிலேஷின் பங்கு மகத்தானது என கூறப்படுகிறது ...
80 சீட்களை மட்டும் வென்ற பி.எஸ்.பி ஆட்சியை இழந்து விட்டது ... சட்டம் , ஒழுங்கை கட்டுக்குள் வைத்ததாக சொல்லப்பட்டாலும் மாயாவதியின் மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம் ... சென்ற முறை இவரது கட்சிக்கு அதிக வாக்குகள் அளித்த பிராமண , தாகூர் சமூகத்தினர் இம்முறை பி.ஜே.பி , காங்கிரஸ் பக்கம் சாய்ந்ததும் பி.எஸ்.பியின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் ...
பி.ஜே.பி யை பொறுத்த வரை கடந்த முறை பெற்ற 51 சீட்களை விட 2 சீட்கள் குறைவாக பெற்றது சறுக்கல் தான் என்றாலும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்ததை எண்ணி வேண்டுமானால் சந்தோசப்பட்டு கொள்ளலாம் ...
பஞ்சாபிலும் வரலாறு காணாத வகையில் ஆளுங்கட்சியான அகாலி தள் - பி.ஜே.பி கூட்டணி 68 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ... ஆட்சியை பிடிக்குமென எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 46 இடங்களையே வென்றிருக்கிறது ...
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல கோவாவிலும் 9 இடங்களையே கைப்பற்றி ஆட்சியை பி.ஜே.பியிடம் இழந்த காங்கிரசிற்கு ஒரே ஆறுதல் மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பதே , அதே போல உத்ராகந்தை பொறுத்த வரை ஆளும் பி.ஜே.பி , காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்தாலும் பி.ஜே.பி யே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லப்படுவதும் காங்கிரஸிற்கு நிச்சயம் கலக்கத்தை கொடுத்திருக்கும் ...
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல பல காங்கிரஸ் தலைவர்கள் உ.பி யில் அடைந்த தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் இல்லை , உள்ளூர் தலைவர்களே காரணம் என்பது போல பேச ஆரம்பித்துவிட்டார்கள் ...இரண்டு நாட்களுக்கு முன்பு கூட உ.பி யில் காங்கிரஸ் அடையப்போகும் வெற்றிக்கு ராகுல் தான் முக்கிய காரணம் என்று சொல்லி வந்தார்களே என கேட்டால் வடிவேலு பாணியில் அது போன வாரம் , இது இந்த வாரம் என்று சொல்வார்களோ என்னவோ , அவர்களுக்கு தான் மக்களின் மறதி மேல் எவ்வளவு நம்பிக்கை !
இந்த தேர்தல் முடிவுகள் அடுத்து 2014 இல் நடக்க போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் என்று சொல்லப்பட்டாலும் , காங்கிரஸின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையும் , நேரு குடும்பத்தில் இருந்து யாராவது போய் நின்றாலே மக்கள் ஓட்டளித்து விடுவார்கள் என்ற காங்கிரஸாரின் நினைப்புக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகவும் இதை நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம் ...
இனி வரப்போகும் தேர்தல்களுக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தியை காங்கிரஸ் அனுப்புகிறதோ இல்லையோ பி.ஜே.பி உட்பட மற்ற எதிர்கட்சிகள் அவர் வரவேண்டுமென்றே வேண்டிக்கொள்ளும் என நினைக்கிறேன் , ஏனெனில் அவர் ராசி அப்படி ...
ஒரு பக்கம் முடிவுகள் இப்படியிருந்தாலும் 2014 க்குள் பி.ஜே.பி தங்களுடைய பிரதம வேட்பாளர் யார் என்பதில் ஒரு தீர்மானத்தையும் , கட்சிக்குள் உள்ள பூசலை களைவதற்குரிய நடவடிக்கைகளையும் இப்பொழுதிலிருந்தே எடுக்காவிட்டால் மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு அவர்களே வழியமைத்து விடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை ...
( மேலே குறிப்பிட்டுள்ள தேர்தல் முடிவு எண்ணிக்கையில் சிற்சில மாற்றங்களை நாளை எதிர்பார்க்கலாம் )
No comments:
Post a Comment