Followers

Tuesday, 6 March 2012

மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்வும் ராகுல்

 
 
 
காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர், நாளைக்கே பிரதமர் பதவி கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படக் கூடியவர், அலெக்சாண்டர் போல் பிரமாதமான தலைவர் என்றெல்லாம காங்கிரஸாரால் கோஷ்டி கானம் பாடப்பட்டு வரும் ராகுல் காந்திக்கு ஐந்து மாநிலத் தேர்தலில் மீண்டும் ஒரு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. அவரது உத்திகளுக்குக் கிடைத்த பெரும் அடியாக இது கருதப்படுகிறது.
 
பெரிய சோகம் என்னவென்றால், தான் எம்.பியாக உள்ள அமேதி தொகுதிக்குட்பட்ட அத்தனை சட்டசபைத் தொகுதிகளையும் அவரது கட்சி சமாஜ்வாடியிடம் பறி கொடுத்திருப்பதுதான். இதுதான் காங்கிரஸை நடுநடுங்க வைத்துள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸின் கொள்கை வகுப்பு, தேர்தல் உத்திகள், வேட்பாளர் தேர்வு என பல முக்கிய விஷயங்களை ராகுல் காந்தியிடம் தூக்கிக் கொடுத்து விட்டனர். இதனால் பிரதமரை மதிக்கக் கூடத் தேவையில்லை என்ற அளவுக்கு காங்கிரஸார் போய் விட்டனர். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான், என்ற அளவுக்கு அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, இப்போது ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் ராகுல் காந்தியின் கொள்கை பலத்த அடியை வாங்க ஆரம்பித்துள்ளது.
 
பீகார் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய மரண அடியை இன்னும் கூட அக்கட்சியினர் மறந்திருக்க முடியாது. அதேபோல ஒரிசாவிலும் ராகுல் காந்தியின் உத்திகளுக்கு பலத்த அடி கிடைத்தது. தமிழகத்திலும் ராகுல் காந்தியின் அணுகுமுறைகள் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கேவலமான தோல்வியையே தழுவியது.
 
இப்போது உ.பியிலும், பஞ்சாபிலும், கோவாவிலும் காங்கிரஸ் வாங்கியுள்ள அடியைப் பார்த்தால், இந்த மாநில மக்களும் ராகுல் காந்தியை ஏற்கவில்லை என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 
உ.பியில்தான் ராகுல் காந்தியின் அணுகுமுறை பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல தொகுதிகளையும் அந்தக் கட்சி நழுவ விட்டுள்ளது. முலாயம் சிங் யாத்வையும், மாயாவதியையும் தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ராகுல் காந்தி. தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அடித்த ஸ்டண்ட்டைப் பார்த்தபோது அனைவருமே வியந்து போயிருந்தனர். ஒருவேளை காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்று விடுமோ என்று கூட நினைக்கத் தோன்றியது.
 
ராகுல் காந்திக்கு உதவி புரிய சகோதரி பிரியங்கா காந்தி, தனது கணவருடன் உ.பியில் முகாமிட்டு ஊர் ஊராகப் போய் வந்தார். ராகுல் காந்தி போகாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு ஷேவிங் செய்யக் கூட நேரமில்லாமல் தாடியுடன், உ.பியை வலம் வந்தார்.நடந்து போனார், விவசாயிகளுடன் உட்கார்ந்து பேசினார், குடிசைகளுக்குள் புகுந்து சாப்பிட்டார், இன்னும் என்னவெல்லாமோ செய்தார். ஆனால் கடைசியி்ல வாக்குகளைப் பெறத் தவறி விட்டார்.
 
இதில் கிளைமேக்ஸ் என்னவென்றால் தனது அமேதி தொகுதியில் ஒரு சட்டசபைத் தொகுதியில் கூட அவரால் காங்கிரஸை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்பதுதான். அமேதி எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபைத் தொகுதிகளையும் சமாஜ்வாடி பிடித்து விட்டது. இது ராகுல் காந்திக்கு பெருத்த அவமானமான செய்தி என்பதில் சந்தேகமில்லை. தனது சொந்தத் தொகுதியைக் கூட அவரால் தக்க வைக்க முடியவில்லை.
 
ராகுல் காந்தியின் புயல்வேகப் பிரசாரம் காங்கிரஸுக்குக் கை கொடுக்கவில்லை. அவரது தேர்தல் உத்திகள், அணுகுமுறைகளுக்கும் பெரும் தோல்வியாக மாறியுள்ளது.
 
உ.பியைப் போலவே பஞ்சாபிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியுள்ளது. கோவாவில் ஆட்சியை பாஜகவிடம் பறி கொடுத்து விட்டது. மணிப்பூரை மட்டுமே தக்க வைத்துள்ளது. அதுவும் கூட அந்த மாநில முதல்வர் இபோபிசங்கின் தனிப்பட் செல்வாக்குதான் காரணமே தவிர காங்கிரஸின் செல்வாக்கு அல்ல.
 
உ.பியில் கடந்த முறை வாங்கியதை விட சில சீட்களை கூடுதலாகப் பெற்றுள்ளது காங்கிரஸ். உத்தரகாண்ட்டில் கூட பாஜகவிடமிருந்து ஆட்சியை இன்னும் அது முழுமையாக பறிக்கவில்லை, இழுபறிதான் காணப்படுகிறது. மொத்தத்தில் ஐந்து மாநில பொதுத் தேர்தல் ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸுக்கும் பெருத்த ஏமாற்றம்தான்.
 
இளைஞர் காங்கிரஸாரை மட்டுமே நம்பி அவர் களப் பணியாற்றுவது பலன் தராது என்பது புரிந்து போய் விட்டது. மேலும் அவரது அதிபுத்திசாலித்தனமான பேச்சுக்களும் மக்களிடம் எடுபடவில்லை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.
 
இனியும் காங்கிரஸ் மேலிடம் ராகுலை முழுமையாக நம்பியிருப்பது எந்த அளவுக்கு அந்தக் கட்சிக்கு உதவும் என்பதும் புரியவில்லை.



No comments:

Post a Comment