உள்ளாட்சித் தேர்தலில் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் களத்தில் 4.11 லட்சம் பேர் உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை (அக்டோபர் 3) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சின்னம் ஒதுக்கீட்டுப் பணிகள் முடிவடையாததால் சில இடங்களில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க. மேயர் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றுள்ளதால் சென்னையிலும் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அனைத்து இடங்களிலும் இறுதி வேட்பாளர்கள் வெளியிடப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நிற்பவர்கள் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையமும் வெளியிட்டுள்ளது.
4.11 லட்சம் பேர்: உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 4 லட்சத்து 11 ஆயிரத்து 177 பேர் போட்டியிகின்றனர்.
இதில் நகர்ப்புறப் பதவியிடங்களில் 65 ஆயிரத்து 587 பேரும், ஊரக பதவியிடங்களில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 673 பேரும் போட்டியிடுகின்றனர்.
போட்டியின்றித் தேர்வு: இத் தேர்தலில் மொத்தம் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளனர்.
நகர்ப்புறப் பதவியிடங்களில் 298 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். இதில் 288 பேர் பேரூராட்சிக் கவுன்சிலர் பதவியிடங்களிலும், 8 பேர் நகராட்சிக் கவுன்சிலர் பதவியிடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
2 பேரூராட்சித் தலைவர்கள் தேர்வு: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சித் தலைவரும், திருப்பூர் சின்னத்தபாளையம் பேரூராட்சித் தலைவரும் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.
சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 18 ஆயிரத்து 977 பேர் வெற்றிபெற்றுள்ளனர். சிற்றுராட்சித் தலைவர் பதவியிடங்களில் 341 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 30 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.
ஒத்திவைப்பு: திண்டுக்கல் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய வார்டுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டின் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஹரிவேந்தன் மறைவால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு இல்லை: அரியலூர் மாவட்டம் கார்குடி சிற்றூராட்சித் தலைவர் பதவி இடத்துக்கும், 54 சிற்றூராட்சி வார்டு பதவியிடங்களுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கார்குடி சிற்றூராட்சியில் இட ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக யாரும் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
உள்ளாட்சிப் பதவியிடங்கள்: மொத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவியிடங்களுக்குத் தேர்தல் நடைபெற இருந்தது. இதில் போட்டியின்றி வெற்றி பெற்றவர்கள், தேர்தல் நடைபெறாத இடங்கள் போக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 697 பதவியிடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.
களத்தில் எத்தனை பேர்?
மொத்த பதவியிடங்கள்: 1,12,697
9 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு 193 பேர்
755 மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 7,156 பேர்
125 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு 1,086 பேர்
3,697 நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 20,999 பேர்
529 பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு 3,402 பேர்
8,303 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 32,751 பேர்
1,18,983 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு 3,45,590 பேர்
(di)
Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
No comments:
Post a Comment