சென்னையின் அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதற்றமானவையாக கருதி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் சென்னை மண்டல தேர்தல் ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆணையர் சோ.அய்யர் அறிவுறுத்தியவை:
வாக்குப் பதிவு நடைபெறும் இரு நாள்களிலும், வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படும் இடங்களிலும், வாக்கு எண்ணிக்கையின்போதும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிவதில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏற்கெனவே வழக்கமாக தயாரிக்கப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மற்ற வாக்குச்சாவடிகளிலும், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளவற்றைக் கண்டறிதல் வேண்டும்.
சென்னையைப் பொருத்தமட்டில் அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதற்றமான வாக்குச்சாவடிகளைப் போலவே கருதி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
2006 உள்ளாட்சித் தேர்தல் போல சென்னை மாநகராட்சியில் வன்முறை ஏதும் நிகழா வண்ணம் மிக கவனமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் சேவியர் கிறிசோ நாயகம், சென்னை மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர்கள் ஆசிஷ் சாட்டர்ஜி, எஸ்.சிவசண்முகராஜா, சி.டி.மணிமேகலை, தி.வி.அமுதவள்ளி, அன்சூல் மிஸ்ரா, எஸ்.நாகராஜன், சென்னை மாவட்ட காவல்துறை ஆணையர் எல்.கே.திரிபாதி,வடக்கு மண்ட காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
(di)
Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
No comments:
Post a Comment