Followers

Tuesday, 4 October 2011

விரட்டப்படும் அதிமுக வேட்பாளர்கள்

 
 
 
பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதின் எதிரொலியாக தென்மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதுவரை இல்லாத அளவிற்கு தாழத்தப்பட்ட பகுதியில் ஏராளமான வாக்குகளை அதிமுக பெற்றது. பொதுவாக அதி்முகவை முக்குலத்தோர் அதிகம் ஆதரிப்பதால் தாழ்த்தப்பட்ட மக்கள் அதி்முகவை ஆதரிக்க மாட்டார்கள் என்ற பலரின் எதிர்பார்ப்பையும் தவிடு பொடியாக்கி தாழ்த்தப்பட்ட மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தனர். கடநத சட்டமன்ற தேர்தலின்போது பல பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். இது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
 
இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையே எதிர்பாராத வகையில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை உதாசீனப்படுத்தி அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. இச்செயல் கூட்டணி கட்சி தொண்டர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்துடன் அதிமுக பலவீனமாகும் சூழ்நிலையும் ஏறப்பட்டது.
 
இந்நிலையில பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜையின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 தாழ்த்தப்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் ஆறாத துயரை உருவாக்கியது.
 
அகில இந்திய அளவில் பல்வேறு தாழ்த்தப்பட்ட அமைப்புகள் உண்மை அறியும் குழு அமைத்து தமிழக அரசின் கொடுமையை உலக அளவில் வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு மீது வெறுப்பு உண்டானது. இந்நிலையில் உளளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பல பகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் நுழைய முடியாத சூழ்நிலை நிலவி வருவதாக அதிமுகவினரே கூறுகின்றனர். பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் நுழையும் போதே அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அத்துடன் அதிமுகவில் பொறுப்பில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பகிரங்கமாக அவர்களது பகுதியில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தாழ்த்தப்பட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணியாறறாமல் ஒதுங்கியே இருக்கின்றனர். இது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
 
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்த பொதுமக்கள் தற்போது தீவிர எதிர்ப்பை காட்டுவது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பல இடங்களில் புதிய தமிழகம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வாக்குகள் பிரிந்துவிடும். எனவே, அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்பாடாது என அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கையோடு உள்ளனர்.

 


No comments:

Post a Comment