இதுவரை நிலமோசடி வழக்கு, ஆள் கடத்தல்- மிரட்டல் வழக்குகளால் ஆடிப்போயிருந்த திமுக வட்டாரம், அடுத்த அதிர்ச்சியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
திமுகவின் நீண்ட நாள் விசுவாசிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இழுக்கும் அல்லது கலைக்கும் வேலையை ஆளும்கட்சியினர் செய்ய ஆரம்பித்திருப்பதே அது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசத் தொடங்கியுள்ளனர்.
இதன் முதல் நகர்வாக, சென்னை திமுகவின் முக்கிய தூண் என வர்ணிக்கப்பட்ட, திமுக விசுவாசியும் முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி திமுகவிலிருந்து விலகப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.
இதன் முதல்படியாக, கட்சியில் தனக்கு வழங்கப்பட்டிருந்த துணைப் பொதுச் செயலர் பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டார் பரிதி.
எழும்பூர் திமுக வட்டாரத்தில் திமுகவினர் 3 பேர் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்தது பரிதி இளம்வழுதியை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்ததால், தலைமையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ராஜினாமாவை அறிவித்துள்ளார் பரிதி இளம்வழுதி.
இன்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், "திமுகவில் தாங்கள் கடைபிடித்து வரும் உட்கட்சி ஜனநாயகத்தின் மீது எனக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். வாழ்க உட்கட்சி ஜனநாயகம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்பட்ட பரிதி இளம்வழுதியின் இந்த ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிலிருந்தே அவர் விலகப் போவதாகவும் தெரிகிறது.
No comments:
Post a Comment