உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள், பிரசாரச் செலவிற்கு பணம் தர முடியாது என்று தி.மு.க., மேலிடம் கைவிரித்து விட்டது .
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது. ஆளுங்கட்சியினர் ஆர்வமாக ஓட்டு கேட்டு வரும் நிலையில், தி.மு.க.,வினரோ பிரசாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சி பலத்துடன் ஆர்வமாக போட்டியிட்ட "உடன்பிறப்புகள்' பலரும், இப்போது "சீட்' வேண்டாம் என்று கூறிவிட்டனர். ஏற்கனவே பொறுப்பு வகித்தவர்கள் கூட, இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஒன்றிய, மாவட்டச் செயலர்கள் பலரும், பல்வேறு காரணங்களைக் கூறி ஒதுங்கிக் கொண்டனர். இதனால், உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., பிரசாரம் "டல்' அடிக்கிறது. குறிப்பாக, பல பேரூராட்சி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பாக யாரும் போட்டியிடவில்லை. சில இடங்களில், சுயேச்சைகளுக்கு ஆதரவு அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம் என விசாரித்தபோது, புலம்பித் தள்ளிவிட்டனர் "உடன்பிறப்புகள்'."கடந்த தேர்தலில் ஆளுங்கட்சி என்பதால், ஆர்வமாக கட்சியினர் போட்டியிட்டனர். இம்முறை ஆட்சி மாறி விட்டதால், நாம் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகத்தில், அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். கட்சி கட்டளையிட்டதற்காக நாங்கள் போட்டியிடுகிறோம். கடந்த முறை, ஒன்றிய கவுன்சிலருக்கு 25 ஆயிரம் ரூபாய், மாவட்ட கவுன்சிலருக்கு 50 ஆயிரம் ரூபாய் தலைமை கொடுத்தது. ஆனால், இம்முறை, பணம் எதுவும் கொடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிட ஆட்கள் கிடைக்காமல், கடைசி நேரத்தில் சிலரை வற்புறுத்தி நிற்க வைத்தனர்.
ஒரு நாளைக்கு, குறைந்தது நான்கு பேருடன் ஓட்டு கேட்கச் சென்றால், சாப்பாடு, டீ செலவு என குறைந்தது 2,000 ரூபாய் வேண்டும். சிலர், மது பானம் கேட்பதால், கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதற்கு செலவு செய்ய முடியாததால், பலர் பிரசாரத்திற்கே செல்வதில்லை. தலைமையும் பணம் கொடுக்காவிட்டால், தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல முடியாது. இதனால், வேட்பாளர்களுக்கு "டிபாசிட்' கூட கிடைக்காது.இவ்வாறு வேட்பாளர்கள் சிலர் புலம்புகின்றனர.
(dm)
Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
No comments:
Post a Comment