Followers

Tuesday 11 October 2011

திருச்சி மேற்குத் தொகுதியில் 5 மணிக்கு மேல் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்ய தடை!


திருச்சி : திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிந்ததும், திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் அக்டோபர் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் படு சூடாக நடந்து வந்தது. ஆளும் கட்சி வேட்பாளர் மு.பரஞ்சோதிக்குக் கிலியேற்படுத்தும் வகையில், திமுக வேட்பாளர் கே.என்.நேருவுக்கு ஆதரவாக திமுகவினர் பம்பரம் போல சுழன்று பணியாற்றி வருகின்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் திருச்சியில் முகாமிட்டு பிரசாரப் பணிகளை கவனித்து வருகின்றனர். அதற்கு சற்றும் சளைக்காமல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் முகாமிட்டு நேரடியாக பிரசாரத்தைக் கவனித்து வருகிறார். தானே போட்டியிடுவதாக கருதி தீவிரப் பணியாற்றுமாறு அவர் திமுகவினரை தட்டிக் கொடுத்து வேலை வாங்கி வருகிறார். இதனால் பிரசாரக் களத்தில் அனல் பறக்கிறது.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதாவும், திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதியும் பிரசாரம் செய்துள்ளனர். தேமுதிக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இந்த களேபரத்தில் பங்கேற்காமல் ஓரமாக இருந்து வேடிக்கை பார்க்கின்றன.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதற்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது. மேலும், திருச்சி மேற்குத் தொகுதியில் வாக்குப் பதிவு நடந்து முடியும் வரை அங்கு உள்ளாட்சித் தேர்தல் பிரசாரமும் செய்யக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

மீறி வாக்கு சேகரிக்கும் முயற்சிகளில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment