திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சை கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மு.பரஞ்சோதி, தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார்கள்.
நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் முடிந்தது. இன்று காலை சரியாக 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முன்னதாகவே அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஏராளமான ஆண், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஓட்டுப்பதிவு தொடங்கியதும் அவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
வாக்காளர்களுக்கு ஆட்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. காலை 8.10 மணிக்கு திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
10 மணிக்கு பிறகு ஓட்டுப்பதிவு விறுவிறுப்படைந்தது. சில வாக்குச்சாவடிகளில் 10 நிமிடம் வரை வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர். தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த ஏதுவாக தொகுதி முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 60 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment