Followers

Wednesday, 12 October 2011

திருச்சி மேற்கு தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு-வெல்லப் போவது யார்?

 
 
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நாளை ஓட்டுப் பதிவு நடக்கவுள்ளது.
 
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன மரியம்பிச்சைக்கு அமைச்சர் பதவி தந்தார் முதல்வர் ஜெயலலிதா. சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்குச் சென்றபோது கார் விபத்தில் அவர் மரணடைந்தார்.
 
இதையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் பரஞ்சோதியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சைகள் உள்பட 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
இந்த தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, பாமக, பாஜக ஆகியவை போட்டியிடவில்லை. இதனால் அதிமுக- திமுக இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.
 
பரஞ்சோதியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த 9ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் கடந்த 1 மாதமாகவே திருச்சியில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர்.
 
திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேரு, நில அபகரிப்பு வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் இருந்ததால், அவர் சார்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தான் வேட்பு மனுவே தாக்கல் செய்தார்.
 
நேருவுக்கு ஆதரவாக ஸ்டாலின் திருச்சியிலேயே முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டார். இரு தினங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியும் நேருவுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்தில் பேசினார்.
 
பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று நேரு ஜாமீனில் விடுதலையாகி ஒரே ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் செய்தார். நேற்று மாலையுடன் பிரச்சாரமும் ஓய்ந்தது.
 
நாளை (வியாழக்கிழமை) இங்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக 240 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்கு சாவடிகளும் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
தேர்தலில் 276 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் காமிரா பொருத்தப்பட்டு அதன் மூலம் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படவுள்ளது.
 
இந்தத் தொகுதியியில் மொத்தம் 2,08,247 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,02,924 பேர். பெண்கள் 1,05,497 பேர், திருநங்கைகள் 6 பேர்.
 
தேர்தல் பணியில் 1,179 பேர் ஈடுபடவுள்ளனர். அனைத்து வாக்கு சாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு படையினர் 600 பேர் உள்பட மொத்தம் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
 
நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும்.
ஓட்டு எண்ணிக்கை வரும் 20ம் தேதி நடக்கிறது.
 
அதிமுகவுக்கு இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு மிக முக்கியமானதாகும். கடந்த 5 மாத கால ஆட்சி குறித்த லிட்மஸ் டெஸ்டாக இந்தத் தேர்வு முடிவு இருக்கும்.



No comments:

Post a Comment