மதுரை மேயர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமா பசும்பொன் திடீர் என்று கட்சியில் இருந்தும், தேர்தலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
மதுரை மேயர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சயின் சார்பில் திருமா பசும்பொன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மறைந்த பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் மூக்கையாத் தேவரின் மகன். வேட்புமனு தாக்கல் செய்ததோடு சரி அவர் பிரச்சாரத்திற்கே செல்லவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது. கட்சிக்காரர்களால் அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை.
அவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் கட்சியினர் குழம்பிக் கொண்டிருக்கையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பினார். அதை கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்ய திருமாவளவன் மதுரைக்கு சென்றார். அந்த பிரச்சாரத்திற்கும் திருமா பசும்பொன் செல்லவில்லை. இந்நிலையில் மதுரை மேயர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கெடு முடிந்த பிறகு இந்த கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார். அதனால் அதை பரிசீலிக்க வாய்ப்பே இல்லை என்று மதுரை மாநகராட்சி தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment