Followers

Wednesday, 12 October 2011

வீடு வீடாக கதவை தட்டி நள்ளிரவில் சேலை சப்ளை! தூக்கி எறிந்த பொதுமக்கள்

 
 
 
கிராமத்தில் நள்ளிரவில் கதவை தட்டி வினியோகித்த சேலைகளை, ஓட்டுக்காக தங்களை அவமானப்படுத்துவதாக கூறி பொதுமக்கள் தூக்கி எறிந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது கண்ணமநாயக்கனூர் ஊராட்சி. இங்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிகவுண்டனூர் ஆதிதிராவிடர் காலனியில் 145 வாக்காளர்கள் இருக்கின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு இந்த காலனிக்கு வந்த 5 பேர், வீடு வீடாக சென்று கதவை தட்டினர். வீட்டுக்கொரு பாலியஸ்டர் சேலை கொடுத்து விட்டு சென்றனர்.
 
சேலை கொடுத்தவர்கள் உள்ளூர் பிரமுகர்கள் என்பதால், எந்த வேட்பாளருக்காக கொடுத்தனர் என்பதை கிராம மக்கள் புரிந்து கொண்டனர். ஓட்டுக்காக தங்களை இழிவுபடுத்துவதாக கூறி நள்ளிரவில் அனைவரும் தெருமுனையில் திரண்டனர். அதற்குள் சேலை கொடுத்தவர்கள் சென்றுவிட்டனர். நூற்றுக்கும் அதிகமான சேலைகளை கிராம மக்கள் தெருமுனையில் தூக்கி எறிந்தனர்.
 
தகவல் அறிந்து இன்று காலை வேட்பாளர்கள் அனைவரும் அந்த கிராமத்துக்கு வந்துவிட்டனர். உடுமலை போலீசிலும், தேர்தல் அதிகாரி முகமது உசேனிடமும் பொதுமக்கள் புகார் செய்தனர். தேர்தல் அதிகாரி சென்று, 54 சேலைகளை கைப்பற்றி ஆர்டிஓ ஜெயமணியிடம் ஒப்படைத்தார். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



No comments:

Post a Comment