திமுக தலைவர் கருணாநிதியால், பயமறியா சிங்கக்குட்டி என்று செல்லமாக பெயரிடப்பட்ட பரிதி இளம்வழுதியின் ராஜினாமா முடிவு திமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் திமுக தலைமை எடுத்த தவறான முடிவுதான் பரிதியை இந்த ராஜினாமா முடிவை நோக்கிச் செல்ல காரணமாக அமைந்தது என்கிறது கட்சி வட்டாரம்.
பரிதி இளம்வழுதி, திமுக முன்னோடித் தொண்டர்களில் ஒருவர். தன்னைத் தொண்டராகவே கருதி எப்போதும் செயல்பட்டு வந்தவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். எழும்பூர் தொகுதியின் அசைக்க முடியாத திமுக தூணாக விளங்கியவர். தந்தை இளம்வழுதி வழியொட்டி திமுகவில் முக்கிய இடத்தை வகித்து வந்தவர். கருணாநிதியிடமும், அவர் புதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் நெருக்கமானவராக திகழ்ந்தவர். இப்படிப்பட்ட ஒருவர், வாழ்க உட்கட்சி ஜனநாயகம் என்று வஞ்சப் புகழ்ச்சியாக திமுக தலைமையை விமர்சித்து விட்டு கட்சிப் பொறுப்பை தூக்கி வீசியிருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
என்ன நடந்தது?
எழும்பூர் பகுதி வட்டச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம். நாதன், பேச்சாளர் எழும்பூர் கு. வீராசாமி ஆகியோர் திமுகவின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால் திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அக்டோபர் 1-ம் தேதி அறிவித்தார்.
இந்த மூன்று பேரின் நீக்கம் பரிதி இளம்வழுதி கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே நடந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் தனக்கு எதிராக செயல்பட்டதாக பரிதி குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எழும்பூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியிடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதி வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்படித் மயிரிழையில் தோற்றுப் போனதற்கு உள்ளடி வேலைகள் பார்த்தது இந்த மூவரும்தான் என்று பரிதி குற்றம்சாட்டி வந்துள்ளார்.
எழும்பூர் தொகுதியில் அசைக்க முடியாதவராக திகழ்ந்தவர் பரிதி. கடந்த தேர்தல் ஒன்றில் அதிமுக சார்பில் ஜான் பாண்டியனை நிறுத்தி, பரிதியை வீழ்த்த முயன்றார் ஜெயலலிதா. அப்போது எழுந்த கடும் வன்முறை மற்றும் கள்ளஓட்டு உள்ளிட்டவற்றையும் தாண்டி ஜெயித்துக் காட்டியவர் பரிதி. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் இல்லாத நிலையிலேயே பரிதாபமாக தான் தோற்க இந்த மூவரும் செய்த உள்ளடி வேலைகள்தான் காரணம் என்பது பரிதியின் குற்றச்சாட்டு.
மேலும், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட தனது ஆதரவைப் பெற்று நிற்கும் திமுக வேட்பாளர்களுக்கு எதிராகவும், இந்த மூ்வரும் செயல்படுவதாக பரிதி கூறியிருந்தார். இதையடுத்தே மூவர் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது.
ஆனால் நீக்கப்பட்ட மூவரும் ஸ்டாலினைப் போய் பார்த்துப் பேசி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கப்படுவதாக அன்பழகன் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக பரிதியிடம் ஒரு வார்த்தை கூட கட்சித் தலைமை கேட்கவில்லை என்று தெரிகிறது. இது தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று கருதிய பரிதி வாழ்க உட்கட்சி ஜனநாயகம் என்று கருணாநிதி பாணியில் ஒரு கடிதத்தை வெளியிட்டு தனது ராஜினா முடிவை கருணாநிதிக்குத் தெரிவித்து விட்டார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவின் உயர் மட்டத் தலைவர் ஒருவர் கட்சிப் பொறுப்பிலிருந்து அதுவும், துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவது இதுவே முதல் முறையாகும்.
பரிதியின் இயற்பெயர் காந்தி. அவரது தந்தை இளம்வழுதி சிறந்த பேச்சாளர், திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். தனது தந்தையால் மட்டுமல்லாது, அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு தானாகவே திமுகவில் இணைந்தவர் பரிதி. திமுகவுக்கென்று இளைஞர் படையை உருவாக்கி அதன் தலைவராக ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் பரிதிதான். இதையடுத்து திமுக தலைமை அமைத்த திமுக இளைஞர் அமைப்பில் ஸ்டாலினோடு, பரிதியும் ஒரு உறுப்பினராக இடம் பெற்றார். திமுக இளைஞர் அணியை தமிழகம் முழுவதும் வளர்க்க ஊர் ஊராக போய் வந்தவர் பரிதி.
'காந்தி' பெயரை மாற்றிய கருணாநிதி
காந்தி என்ற பெயரிலேயே திமுகவில் வலம் வந்து கொண்டிருந்த பரிதிக்கு அந்தப் பெயரை சூட்டியதே கருணாநிதிதான். 1982ம் ஆண்டு, தந்தை பெயரான இளம்வழுதியுடன், பரிதியை இணைத்து பரிதி இளம்வழுதி என்று இன்று முதல் அழைக்கப்படுவதாக அறிவித்தார் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
எழும்பூர் தொகுதியில் 6 முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியும், துறைமுகம் தொகுதியில் செல்வராஜும் மட்டுமே வெற்றி பெற்றி பெற்றனர். கருணாநிதி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். செல்வராஜ் மதிமுகவில் இணைந்து விட்டார். பின்னர் நடந்த இடைத் தேர்தலில் பரிதி நிறுத்தப்பட்டு வென்று தனி மனிதராக சட்டசபையில் திமுகவின் குரலாக ஒலித்து, காங்கிரஸாரால் தாக்குதலுக்கும் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவி் சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தொடங்கி, இறுதியாக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வரை பல பதவிகளில் இருந்தவர் பரிதி.
திமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவராக விளங்கிய பரிதியின் ராஜினாமா முடிவு அடுத்து திமுகவிலிருந்து விலகல் என்ற நிலைக்குப் போகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சித் தலைமை குறுக்கிட்டு பரிதியை தக்க வைக்கும அல்லது 'பயமறியா சிங்கக்குட்டி'யாக கருணாநிதியால் பாராட்டப்பட்ட பரிதியை தவற விடுமா என்பது திமுகவினரின் பெரும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
No comments:
Post a Comment