கோவில்பட்டியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கருணாநிதி தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகராட்சியில் 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் கருணாநிதி (37) என்பவர் போட்டியிடுகிறார். அவர் தனது வீட்டின் அருகே உள்ள வீட்டில் வைத்து சுமார் 150 வாக்காளர்களுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்ததாக வி.ஏ.ஓ.,ராஜசேகரன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மேற்கு போலீசார், வருவாய் துறையினர் அங்கு சென்றனர். ஆனால் அப்போது அங்கு சிக்கன் பிரியாணி விருந்து நடக்கவில்லை. அதுபோல, சாப்பாட்ட பாத்திரங்களும் அங்கில்லை. சேர்கள் மட்டுமே கிடந்தன. இது குறித்து கருணாநிதியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாக்காளர்களுக்கு சிக்கன் பிரியாணி கொடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது. இதையடுத்து கருணாநிதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவில்பட்டி நகராட்சியின் 31வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பாரதிநகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு கரண்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செல்வராஜ் பாரதிநகர் பகுதியில் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், அப்போது தனது சின்னமான கரண்டியை பொதுமக்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிகாரிகளுக்கு புகார் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து துணை தாசில்தார் தலைமையில் பறக்கும்படையினர்,ஆர்.ஐ., வி.ஏ.ஓ., கிழக்கு போலீஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் செல்வராஜின் வீட்டிலிருந்து சுமார் 19 கரண்டிகளை கைப்பற்றி, தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி கமிஷனர் மூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கோவில்பட்டி மேற்கு போலீசில் செல்வராஜ் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment