திருச்சி: ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு 24 மணிநேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தாதது சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ள திருச்சி நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட 3 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கே.என்.நேரு இன்று காலை கடலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்ட இடம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் நேரு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் நேருவுக்கு ஜாமீன் கிடைத்தது.
ஆனால் அவர் வெளியே வருவதற்குள்ளாகவே, அவர் மீது விமான நிலையம் அருகே உள்ள இடத்தை அபகரித்தது உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிலும் நேருவுக்கு ஜாமீன் கிடைத்தது.
இருப்பினும், திருச்சி மொரைஸ் சிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்திமிடருந்து இலவசமாக பிளாட்கள் கேட்டு மிரட்டியதாக நேரு உள்ளிட்டோர் மீது 2ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்ற 4 வழக்குகளில் ஜாமீன் பெற்றதற்கான உத்தரவுகள் கடலூர் சிறையில் கொடுக்கப்படாததால் தொடர்ந்து சிறையில் இருந்தார்.
இந்நிலையில் புதிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க கடந்த 7ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு ஜேஎம் 4ம் எண் நீதிபதி புஷ்பராணி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவர் வழக்கை 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையடுத்து இவ்வழக்கு விசாரணை நேற்று மாஜிஸ்திரேட் மகேஸ்வரி பானுரேகா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் கே.என்.நேரு, துணை மேயர் அன்பழகன், ராமஜெயம் மூவரையும் கைது செய்வதற்கான வாரண்ட் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட கைதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே இனியும் தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நேருவின் தம்பி ராமஜெயம், திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் உடனடியாக ஜாமீன் பத்திரத்தை வழங்கி விடுதலையாகினர். ஆனால் நேரு ஏற்கனவே பெறப்பட்ட ஜாமீன்கள் தொடர்பான பத்திரங்களில் கையெழுத்திடாமல் இருந்ததால் அவரை மீண்டும் கடலூர் சிறைக்குக் கொண்டு போய் விட்டனர்.
இன்று காலை அவர் ஜாமீன் பத்திரங்களில் கையெழுத்திட்டார். இதையடுத்து அவரை கடலூர் சிறை அதிகாரிகள் விடுவித்தனர். இதையடுத்து வெளியே வந்த நேருவுக்கு திமுகவினர் பெரும் திரளாக திரண்டு வந்து வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்றனர்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் நேரு, பிரசாரம் இன்று முடிவடையவுள்ள நிலையில் வெளியே வந்துள்ளார்.
சிறையை விட்டு வெளி வந்த நேரு உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின்னர் திருச்சி விரைகிறார். கடைசிக் கட்ட பிரசாரத்தில் அவர் பங்கேற்கிறார்.
No comments:
Post a Comment