Followers

Wednesday, 5 October 2011

“என்னைக் கேட்காமலேயே என் பெயர் அறிவித்தது ஏன்’..சிட்டிங் மேயர் சுஜாதா….

 

"என்னைக் கேட்காமலேயே மாநில காங்கிரஸ் கட்சி, மேயர் வேட்பாளராக என்னை அறிவித்து விட்டது. மேயர் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை," என, சிட்டிங் மேயர் சுஜாதா தெரிவித்தார்.

"காமெடி பீஸ்' போல செயல்படுவது என்ற முடிவுக்கு, காங்கிரஸ் கட்சி வந்து விட்டது போன்ற காட்சிகள், கடந்த மூன்றாண்டுகளாக அரங்கேறி வருகின்றன. சிதம்பரம், வாசன், இளங்கோவன், தங்கபாலு என, பற்பல கோஷ்டிகளால், திக்குமுக்காடிக் கிடக்கும் இக்கட்சியில், ஆதரவாளர்களை விட, அதிருப்தியாளர்கள் அதிகம் பேர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய விவகாரம், திருச்சி மாநகராட்சி குறித்தது.

திருச்சி மாநகராட்சி மேயராக உள்ள சுஜாதா, நேற்று மீண்டும், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். தன்னிடம் ஒப்புதல் கேட்காமலேயே, பெயர் அறிவிக்கப்பட்டதால், கொதித்துப் போயுள்ள சுஜாதா நேற்று கூறியதாவது:

மேயர் பதவிக்கு நான் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு கொடுக்கவே இல்லை. என் பெயருக்கு யாரோ பணம் கட்டியுள்ளனர். மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல், என் பெயரை அறிவித்து விட்டனர். இதுவரையிலும் என்னிடம் பேசவோ, கேட்கவோ இல்லை. மேயர் வேட்பாளராக அறிவித்தது எனக்கே தெரியாது.

நான் மீண்டும் போட்டியிடப் போவது இல்லை.வேட்பு மனுதாக்கல் செய்ய கால அவகாசம் இருப்பதால், வேறு வேட்பாளரை அறிவிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. நான் திருச்சியில் மேயராக இரண்டு ஆண்டுக்கு மேல் பதவி வகித்து விட்டேன். காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதால், நான் இத்தேர்தலில் போட்டியிட விரும்ப வில்லை.

இவ்வாறு சுஜாதா கூறினார்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்துக் கட்சியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியும் தனித்தே போட்டியிடும் சூழ்நிலையில், வெற்றி பெறும் வாய்ப்பு மிக குறைவாக உள்ளதால், போட்டியிலிருந்து விலகிக் கொள்ள மேயர் சுஜாதா முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்

No comments:

Post a Comment