Followers

Thursday 6 October 2011

உள்ளாட்சியை எங்களுக்கு தந்தால் நல்லாட்சியை உங்களுக்கு தருவோம்: மதுரையில் விஜயகாந்த் பேச்சு

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை விஜயகாந்த் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் கவியரசு மற்றும் தே.மு.தி.க-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மதுரை வந்தார்.
 
ஜெய்ஹிந்த்புரம் அருகில் சோலையழகுபுரத்தில் உள்ள ஒரு தியேட்டர் அருகே திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
 
தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். காலம் நேரம் மாறுவது உண்டு. தே.மு.தி.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூட்டணி வைத்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
 
இந்த உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. மேயர் கவியரசு மற்றும் வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். உள்ளாட்சியை நீங்கள் எங்களுக்கு தந்தால் நல்லாட்சியை உங்களுக்கு நாங்கள் தருவது உறுதி.
 
மதுரையில் மேயர் பதவிக்கு போட்டியிடும் 2 வேட்பாளர்கள் கட்ட பஞ்சாயத்து செய்தவர்கள். தே.மு.தி.க. வேட்பாளர் கவியரசு நல்லவர், வல்லவர். எனவே அவரை வெற்றி பெற செய்து அவரிடம் மாநகராட்சியை கொடுங்கள். மதுரை எனக்கு நன்றாக தெரியும். நான் இந்த வழியாக அடிக்கடி மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளேன். யார்? யார்? என்னென்ன? செய்வார்கள் என்பது எனக்கு தெரியும்.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் நமது வேட்பாளர்கள் சுந்தரராஜன், ஏ.கே.டி.ராஜா ஆகியோரை வெற்றி பெற செய்தீர்கள். அவர்கள் தற்போது உங்களை தேடி வருகிறார்கள். அதுபோல இந்த உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அவர்கள் உங்களை தேடி வருவார்கள். வரியை குறைப்பேன். அதை குறைப்பேன், இதை குறைப்பேன் என்று கடந்த முறை இருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பது தான் உண்மை.
 
உள்ளாட்சி தேர்தல் என்பது உங்கள் ஆட்சி. மக்களின் ஜீவாதார தேவைகளை நிறைவேற்றி கொள்வதுதான் உள்ளாட்சி தேர்தல். ஓட்டு கேட்க வரும்போது உங்களிடம் கெஞ்சுவார்கள். பின்னர் நீங்கள் அவர்களிடம் கெஞ்சும் நிலை ஏற்படும். திரும்பவும் கட்ட பஞ்சாயத்துகாரர்களிடம் மாநகராட்சியை கொடுத்து விடாதீர்கள். கடந்த 2 மாதமாக தான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். நான் எனது சொந்த பணத்தில் தாய்மார்களுக்கு கம்ப்யூட்டர், தையல் மிஷின், முதியோர் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். எனவே இந்த உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்யுங்கள்.
 
இந்த தேர்தலில் மேயர் வேட்பாளர் கவியரசுவை வெற்றி பெற செய்தால் தான் மதுரைக்கு மீண்டும் மீண்டும் வந்து உங்களது குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பேன். எனது கட்சிக்காரர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்களும் லஞ்சம் வாங்க மாட்டார்கள். இதை உறுதியாக சொல்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் 29 எம்.எல்.ஏ.க்களை தந்து இருக்கிறீர்கள். அடுத்த தேர்தலில் எங்களை ஆட்சி கட்டிலில் அமர வையுங்கள். ரமணா படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஊழலை எவ்வாறு நான் எதிர்க்கிறேன் என்பதை பார்த்து இருப்பீர்கள். அதுபோல ஊழலின் ஆணி வேரை அகற்ற வேண்டும். ஒரு சாதாரண பெண் கடையில் காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்குகிறார். அதுபோல கட்சியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.



No comments:

Post a Comment