ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் அன்னா ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
மேலும், 'இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. காரணம் இங்கே இருப்பவை பெரிய திமிங்கிலங்கள். ஹஸாரேயின் வலை கிழிந்து விடும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
மும்பையில் நேற்று தசரா பேரணியில் பேசிய தாக்கரே, "ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒரு தமாஷ். ஒருபக்கம் இவர் தொழிலதிபர்களிடம் பணத்தை வாங்குறார். இன்னொரு பக்கம் ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கிறார். இவர் உண்ணாவிரதம் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டல் சமாச்சாரம் மாதிரிதான் இருக்கிறது.
இப்படி பொய்யான நோக்கத்துடன் செயல்படும் இவரால் இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. இதைச் சொல்லும் எங்களுடன் ஹஸாரே விரோதம் பாராட்டுவது தேவையற்றது. மேலும் அவர் மீதான என் விமர்சனங்களை கிண்டலடித்துள்ளார் ஹஸாரே. அவர் என்னைவிட வயதில் இளையவர். அதனால்தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்," என்றார்.
ஏற்கெனவே ஒருமுறை தாக்கரே இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது, தனக்கு பணம் தந்த நிறுவனங்களின் பெயர்களை தாக்கரே சொல்வாரா? எனக்கு தொழில் அதிபர்கள் பண உதவி செய்வதாக பால் தாக்கரே நிரூபித்து விட்டால், நான் என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு அடிமையாக இருக்க தயாராக இருக்கிறேன், என ஹசாரே சவால் விட்டார்.
ஆனால் இப்போது மீண்டும் இதே போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் தாக்கரே.
No comments:
Post a Comment