Followers

Saturday 8 October 2011

'ஆர்எஸ்எஸுக்காக பிரச்சாரம் செய்யும் ஹஸாரே' - காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
 
 
ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தன்னார்வலர்கள் நிறைந்துள்ளனர். எந்த பதவியையும் எதிர்ப்பார்க்காமல் தங்கள் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர், என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
 
இதன் மூலம் அன்னா ஹஸாரேயின் இந்த போராட்டமே ஆர்எஸ்எஸ் பாஜக தூண்டுதலின் பேரில் நடந்துவரும் ஒரு அரசியல் சதி என தாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறி வந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 
ஆனால் தமது போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கு எதுவும் இல்லை என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
நவராத்திரி ஊர்வலத்தில் சமீபத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், "அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவும் பங்களிப்பும் உண்டு. இந்த போராட்டத்தில் ஏற்கெனவே எங்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். எந்த பதவியும் அந்தஸ்தும் எதிர்ப்பாக்காமல் பணியாற்றி வருகின்றனர்," என்று அவர் கூறினார்.
 
அவரது இந்த அறிவிப்பைத் சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய சிங் ஹசாரே மீது குறைகூறியுள்ளார்.
 
"ஹசாரே மற்றும் ராம்தேவின் பிரசாரங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்ஸால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுபவை என நான் முன்பிலிருந்தே கூறி வருகிறேன். இந்த உண்மையை மோகன் பகவத் இப்போது ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி. என்னுடைய கூற்று உறுதியாக்கப்பட்டுள்ளது. ஹசாரேவின் பிரசாரம் ஆர்எஸ்எஸ்ஸால் நடத்தப்படுகிறது என நான் எப்போது கூறினாலும், என்னை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் (ஹஸாரே) கூறுவார். இப்போது நான் மனநல மருத்துவமனைக்கு போக வேண்டுமா, வேண்டாமா என்பது தெரியவில்லை," என திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.
 
'காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்'
 
இதற்கிடையே காங்கிரஸுக்கு எதிரான தனது தேர்தல் பிரச்சாரத்தை அன்னா ஹசாரே தொடங்கிவிட்டார்.
 
இதன் முதல் கட்டமாக 'ஊழல் அரசு' என்ற பத்து நிமிட குறுவட்டு (சிடி) மூலம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜன் லோக்பால் மசோதா கொண்டுவர தவறிய காங்கிரஸ் கட்சியை ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் தொகுதிக்கான மக்களவை இடைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.
 
அடுத்து, ஹஸாரேயுடன் அவரது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய அணி ஹிஸ்ஸார் தொகுதியில் முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


No comments:

Post a Comment