Followers

Tuesday, 4 October 2011

5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸை எதிர்த்து பிரசாரம்- அன்னா எச்சரிக்கை

 
 
வலுவான லோக்பால் கொண்டுவரவில்லை என்றால் அடுத்து சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் அன்னா ஹஸாரே.
 
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரி வருகிறார். இதற்காக டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் 12 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
 
அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டாலும், நடைமுறை சிக்கல் காரணமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
 
அடுத்து வர இருக்கிற பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக மீண்டும் போராட்டத்துக்கு தயாராகிறார். இந்த முறை அவர் காங்கிரசுக்கு எதிராக நேரடியாக பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
 
இதுபற்றி அன்னாஹசாரே இன்று தனது சொந்த ஊரான ராலேகான் சித்தி கிராமத்தில் நிருபர்களிடம் பேசுகையில், "லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு காலம் கடத்துகிறது. பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடருக்கு முன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
 
இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன்.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன்.
 
உபியில் 3 நாள் உண்ணாவிரதம்
 
முதல் கட்டமாக உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரசை எதிர்த்து லக்னோவில் 3 நாள் உண்ணாவிரதம் இருப்பேன். மற்ற மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்வேன். காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று மக்களிடம் எடுத்துக் கூறுவேன்.
 
அரியானா மாநிலத்தில் வருகிற 13-ந்தேதி ஹிஸ்ஸார் பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. ஹிஸ்ஸார் தொகுதி மக்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் ஹிஸ்ஸார் தொகுதிக்கு சென்றும் பிரசாரம் செய்வேன். நான் காங்கிரசை எதிர்ப்பதன் மூலம் அவர்கள் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்.
 
ராம்லீலா மைதானத்தில் அப்பாவி ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது அரசு தாக்குதல் நடத்தலாமா? ஒரு கட்சி சுத்தமாக இருந்தால்தான் அந்த கட்சி நிறுத்தும் வேட்பாளரும் கரைபடியாதவராக இருப்பார். அந்த வகையில் மன்மோகன்சிங் சுத்தமானவரா என்பது கேள்வி அல்ல. அவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுவதுதான் பிரச்சினை.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மன்மோகன் சிங் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்கிறார். அப்படியானால் அவர் ஏன் ஒதுங்கி இருக்க வேண்டும். தனக்கு தானே அக்னி பரீட்சை செய்து கொள்ள முன்வர வேண்டும்.
 
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அவரது பெயரும் அடிபடுகிறது. குற்றச்சாட்டை அவர் சந்தித்தே ஆக வேண்டும். அக்னி பரீட்சையில் நிரூபித்து சுத்தமானவராக வெளியே வரவேண்டும். அதுதான் நல்லது. அதற்காக அவர் ஏன் கவலைப்பட வேண்டும்.
 
மன்மோகன்சிங்கை தவறானவர் என்று நான் சொல்ல வில்லை. லோக்பால் மசோதா நிறை வேறும் வரை ஓய மாட்டேன். எனது 3 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்தது. ஆனால் அதை நிறைவேற்ற அறிகுறி காணப்படவில்லை. எனது போராட்டத்துக்கு காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
நான் பாஜக ஆதரவு என்று சொல்பவர்கள் பைத்தியக்காரர்கள்!
 
பாரதீய ஜனதா தலைவர் நிதின்கட்காரியும் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளார். காங்கிரசை எதிர்ப்பதன், மூலம் நான் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சொல்பவர்களை மனநல ஆஸ்பத்திரிக்குதான் அனுப்ப வேண்டும்.
 
பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் நடத்திய எந்த ஒரு சிறிய கூட்டத்தில் கூட நான் கலந்து கொண்டது கிடையாது.லோக்பால் மசோதா நிறை வேற வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்கு முன் வராத காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்.
 
குஜராத்தில் போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட்டை கைது செய்ததன் மூலம் நரேந்திரமோடி தவறு செய்து விட்டார். இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும்போது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?," என்றார்.



No comments:

Post a Comment